திங்கள், 9 ஜூலை, 2012

.



ஏகஇறைவனின் திருப்பெயரால் 
....
وَعَلَى الثَّلاَثَةِ الَّذِينَ خُلِّفُواْ حَتَّى إِذَا ضَاقَتْ عَلَيْهِمُ الأَرْضُ بِمَا رَحُبَتْ وَضَاقَتْ عَلَيْهِمْ أَنفُسُهُمْ وَظَنُّواْ أَن لاَّ مَلْجَأَ مِنَ اللّهِ إِلاَّ إِلَيْهِ ثُمَّ تَابَ عَلَيْهِمْ لِيَتُوبُواْ إِنَّ اللّهَ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ {118}
9:118. தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான்.) பூமி விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது சுருங்கி விட்டது. அவர்களது உள்ளங்களும் சுருங்கி விட்டன. அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க) அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.210


தலைவரே பொறுப்பாளர். 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
கடந்த கட்டுரையில் கோபம் தணிந்ததும் இணைந்துவிட வேண்டும் என்ற நற்சிந்தனை   உதயமானாலும் வலியப் போக வேண்டியதில்லை என்ற வறட்டு கௌரவத்தால் இணைய மறுப்போரை சமாதானக் குழுவை நியமித்து இணைத்து விட வேண்டும் என்று இறைநம்பிக்கையாளர்களுக்கு இறைவன் விதியாக்கிதைப் பார்த்தோம் 
இதில் கணவன் - மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகளை பஞ்சாயத்திற்குப் போவதற்கு முன் அவர்களே பரஸ்பரம் விட்டுக் கொடுத்து இணைந்து விட வேண்டும் என்றும் அது முடியாமல் போனால் அவர்களின் குடும்பத்தினரில் இருவர் முன்நின்று பிரச்சனையை தீர்த்து இணைத்து விட வேண்டும் என்றும் இறைநம்பிக்கையாளர்களுக்கு இறைவன் விதியாக்கிதையும் பார்த்தோம்.
கணவன் - மணைவி பிரச்சனை பஞ்சாயத்திற்கு சென்றால் குரங்கு கை மாலையாக மாறி விடுவதற்கே அதிகம் வாய்ப்பிருக்கிறது. ஏன் என்றால் பஞ்சாயத்து தலைவர் இரண்டில் ஒரு குடும்பத்திற்கு சொந்தக் காரராக அல்லது வேண்டியப்பட்டவராக இருந்து விட்டால் தீர்ப்பைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை (?) எனும் அளவுக்கு அமைந்து விடும்.

பிச்சனையின் தீவிரத்தை அறிந்து மனசாட்சிக்கு கட்டுப்பட்டு மார்க்க அடிப்படையில் தீர்ப்பளித்த காலம் மறை ஏறி விட்டதால் பஞ்சாயத்திற்கு சென்ற கணவன்-மனைவி பிரச்சனை சுமுகமாக தீர்க்கப்பட்டு இணைந்து வாழ்ந்த தம்பதியர் மிகக் குறைவு என்றேக் கூறலாம்.
தீர்ப்பளிக்கும் பொறுப்பிலுள்ளவர்கள் இவ்வாறான நிலையில் தோன்றுவார்கள் என்பதை அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்தப் பிரச்சனையை மட்டும் நான்கு சுவர்களுக்குள் முடித்துக் கொள்ளும்படி தன் திருமறையில் தீர்ப்பளித்து விட்டான். அல்லாஹ்வின் தீர்ப்பை பின்பற்றும் காலமெல்லாம் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்க்கலாம், பிரிவுகளைத் தவிர்க்கலாம்.
இரு சாராருக்கு மத்தியிலானப் பிரச்சனைகள்

நாட்டுக்குள், நகருக்குள், தெருவுக்குள் இரு சாரார் கடும் கோபத்தால் மோதிக் கொண்டால் அவர்களின் பிரச்சனைகளை பேசித் தீர்த்து இணைத்து விடுவதற்கு மற்றவர்களை விட தலைவரே தகுதியானவர் என்பதை இன்றைய தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் தலைவருக்கு இது வேலை இல்லை என்று ஒதுங்கி விடக் கூடாது.  
உலகின் இஸ்லாமிய நாடுகளை ஆளும் மன்னர்களுக்கு, இஸ்லாமிய அமைப்புகளுக்கு, ஜமாத்களுக்கு  தலைமைப் பொறுப்பை வகிக்கும் ஒவ்வொரு தலைவருக்கும் உலக மக்களுக்கு முன்மாதிரியாக அனுப்பப்பட்ட அண்ணல் நபி(ஸல்) அவர்களின் செயல்பாடு சிறந்த வழிகாட்டுதலாக அமையும்.
ஒருவர் மீதொருவர் கற்கள் வீசிக் கொள்ளுமளவிற்கு 'குபா' வாசிகள் (தமக்கிடையே) சண்டையிட்டனர். அல்லாஹ்வின் தூதரிடம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர்கள், 'நம்மை அழைத்துச் செல்லுங்கள். நாம் அவர்களுக்கிடையே சமாதானம் செய்து வைப்போம்'' என்று கூறியதாக ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்கள் அறிவித்தார்கள். நூல்: புகாரி 2693.
மக்கள் ஆத்திரத்தாலும், அவசரத்தாலும் நேருக்கு நேர் மோதிக்கொண்டும் அல்லது கருத்து வேறுபாட்டால் பிரிந்து நின்று ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டிருக்கும் நிலை உருவாகி விட்டால் அது நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் இதுபோன்ற குழப்பங்களை உடனடியாக தீர்த்து வைக்க நேரடியாக களமிறங்கியாக வேண்டும் என்பதையே மேற்காணும் நபிமொழி பறைசாற்றுகின்றது.
நாற்காலியில் அமர்ந்து கொண்டு நாட்டின் நலனுக்காக தீட்டப்படும் நலப் பணித் திட்டங்களை விட மக்கள் மத்தியில் நிகழும் மோதலை முதலில் முடிவுக்குக் கொண்டு வருவதற்கு போர்க்கால நடிவடிக்கைகள் போல் துரிதமாக சமாதான நடவடிக்கையை தலைவர் மேற்கொள்ள வில்லை என்றால் நலத் திட்டங்கள் மக்களை சென்றடையாது நிர்வாகமும் சீராக இயங்காது.
மக்கள் ஒற்றுமையாக இருந்து அரசுக்கு, நிர்வாகத்துக்கு ஆதரவாகத் திகழும் காலம் வரை அந்த அரசை, நிர்வாகத்தை எந்த தீய சக்தியாலும் அசைக்க முடியாது. இதனால் தான் என்னை அங்கே அழைத்துச் செல்லுங்கள் நான் அவர்களுடைய பிரச்சனையை முதலில் தீர்த்து வைக்கிறேன் என்று அகில உலகுக்கும் அழகிய முன்மாதிரியாக அனுப்பப்பட்ட அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இன்றிருக்கும் பாதுகாப்பற்ற நிலையில் மன்னர் போய் பிரச்சனையை தீர்க்க முடியுமா என்ற கேள்வி எழலாம் ? இன்றிருப்பது போன்ற பாதுகாப்பற்ற நிலையே அன்றும் இருந்தது.
இப்னு உபையுடைய சதி திட்டம்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருவதற்கு முன் மதீனா நகருக்கு மன்னராக மூடிசூட்டும் நிலையில் அப்துல்லாஹ் இப்னு உபை என்பவன் மக்களால் தேர்வு செய்யப்பட்டிருந்தான். அவனுக்கு வரவேண்டிய அந்தப் பதவியை அதற்கு தகுதியானவர்கள் அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்களே என்று முடிவெடுத்த மக்கள் அதை அவர்களுக்கே மாற்றி விட்டனர்.
அதனால் அவன் பெயரளவுக்கு முஸ்லீமாக மாறிக்கொண்டு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் நிர்வாகத்திற்கு தொடர்ந்து இடையூறு கொடுத்துக்கொண்டும், மக்களுக்கு மத்தியில் பிரச்சனைகளையும், பிளவுகளையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தான்.
ஒரு நாள் அவனுடையப் பகுதியில் அவனால் உருவானப் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்காக  அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை அந்தப் பகுதி மக்கள் அழைத்தனர்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடைய இடத்தில் வேறு யாராக இருந்தாலும் அங்கே செல்வதற்கு மறுப்பார்கள், எதையாவது சாக்குப் போக்குக் கூறி தவிர்ப்பார்கள். ஆனால் பிரச்சனை முடிய வேண்டும் எனும் தூய எண்ணத்தில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து அங்கு சென்றார்கள் இது அச்சமற்ற நிலையா ? இல்லையா ? என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களைக் கண்டதும் அவர்களை நாடாளும் மன்னர் என்றும் பாராமல், அல்லாஹ்வின் தூதர் என்றும் பாராமல் தூர விலகிப் போ நீ அமர்ந்து வந்த  கழுதையின் துர்நாற்றம் என்னைத் துன்புருத்தி விட்டது என்றுக் கூறி அவர்களுக்கும் அவர்களுடன் வந்த மக்களுக்கும் அப்துல்லாஹ் பின் உபை கோபத்தை மூட்டி விட்டான். ஆனால் அண்ணல் அவர்கள் கோபம் கொள்ள வில்லை அமைதி காத்தார்கள். 
அன்சாரி தோழர் ஒருவருக்கு கோபம் மேலிட உன்னை விட அந்த கழுதையின் நாற்றம் எவ்வளவோ மேல் என்று சடேரென பதிலளிக்க கண் இமைக்கும் நேரத்தில் இரு சாராருக்கும் மத்தியில் கடும் சண்டை மூண்டு கைகளில் கிடைத்ததை எடுத்து தாக்கிக் கொள்ளும் மோசமான நிலை உருவாகி விட்டது.
நபி(ஸல்) அவர்களிடம், 'தாங்கள் அப்துல்லாஹ் இப்னு உபையிடம் வந்தால் நன்றாயிருக்கும்'' என்று கூறப்பட்டது. 2 நபி(ஸல்) அவர்கள் அவனிடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். முஸ்லிம்களும் நபி(ஸல்) அவர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது. அவனை நபி(ஸல்) அவர்கள் சென்றடைந்தபோது அவன், 'தூர விலகிப் போ! அல்லாஹ்வின் மீதாணையாக! உன் கழுதையின் துர்நாற்றம் என்னைத் துன்புறுத்திவிட்டது'' என்று கூறினான். அப்போது அவர்களிடையே இருந்த அன்சாரி (தோழர்) ஒருவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய கழுதை உன்னை விட நல்ல வாசனையுடையதாகும்'' என்று கூறினார். அப்துல்லாஹ்வுக்காக அவனுடைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஆத்திரமடைந்து அந்த அன்சாரியை ஏசினார். அந்த இருவருக்காகவும் அவரவருடைய நண்பர்கள் கோபமடைந்தார்கள். தங்களுக்கிடையே ஈச்சங் (ம்கிளையின்) குச்சியாலும், கைகளாலும் செருப்புகளாலும் அடித்துக் கொண்டார்கள். அப்போது, 'மேலும், இறைநம்பிக்கையாளர்களில் இரண்டு குழுவினர் தங்களுக்குள் சண்டையிட நேர்ந்தால் அவர்களிடையே சமாதானம் செய்து வையுங்கள்'' (திருக்குர்ஆன் 49:09) என்னும் வசனம் அருளப்பட்டிருக்கிறது என்னும் செய்தி எங்களுக்கு எட்டியது. 2691. அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஏற்கனவே ஒரு பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் பொழுது புதிதாக வேறு ஒரு பிரச்சனையையும் சேர்த்துக் கிளப்பி விட்டால் பிரச்சனையை தீர்க்க முடியாமல் திரும்பிப் போய் விடுவார்கள் என்று கங்கனம் கட்டி செயல்பட்ட இப்னு உபையுடைய சதி திட்டத்தை அல்லாஹ் அந்த இரு சாராரையும் சமாதானம் செய்து இணக்கத்தை ஏற்படுத்துங்கள் என்ற வஹியை அனுப்பி முறியடித்து தனது தூதருடைய நல்ல திட்டத்தை வெற்றி பெறச் செய்தான்
அப்துல்லாஹ் இப்னு உபை மோசமானவன் அவனுக்கு ஆதரவளிக்கக் கூடியவர்கள் அவனை விட மோசமானவர்களாகத் தான் இருப்பார்கள் ஆனால் அவர்கள் முஸ்லீம்கள் அவ்வளவு தான்.
இன்று இப்படி இருப்போர் நாளை நல்லவர்களாக மாறமுடியும் யாரும் யாருடைய உள்ளத்தையும் பிளந்துப் பார்க்க முடியாது இப்படிப்பட்டவர்கள் நாளை இப்படித் தான் இருப்பார்கள் என்று தோராயமாக கணித்து அவர்களை இணைத்து விடும் விஷயத்தில் பின் வாங்கக் கூடாது. இது அல்லாஹ்வின் தீர்ப்பு அல்லாஹ்வின் தீர்ப்பை புறந்தள்ளி விட்டு தனது தான் தோன்றித் தனமான தீர்ப்பை (ஆரூடத்தை) பின் பற்றக் கூடாது.
அல்லாஹ்வின் சட்டத்தில் பிரச்சனை தீர வழி இருக்கிறது என்ற நம்பிக்கையில் தலைவர் களமிறங்க வேண்டும் அவ்வாறு களமிறங்கிவிட்டால் அங்குள்ள பிரச்சனைகளையும் அல்லாஹ் தீர்த்து வைப்பான் பாதுகாப்பற்ற நிலையில் நிற்கும் தலைவரையும் பாதுகாப்பான் அல்லாஹ் கை விட மாட்டான் அல்லாஹ்வின் அருள் அவர் மீது இறங்குவதை எவராலும் தடுக்க முடியாது.
அல்லாஹ்வுடைய மக்களை காக்கும் அமானிதப் பொறுப்பு.

தலைமை பொறுப்பு என்பது அல்லாஹ்வுடைய மக்களை நிர்வாகம் செய்யும் அமானிதப் பொறுப்பாகும் பிறருடைய சாதாரண அமானிதப் பொருளை அவரிடம் திருப்பிக் கொடுக்கும்வரை எப்படி அதில் தனி கவனம் செலுத்துவோமோ அதேப் போன்று அல்லாஹ்வுடைய மக்களை நிர்வாகம் செய்யும் வலிமை வாய்ந்த தலைமைப் பொறுப்பிலிருந்து இறங்கும் வரை அதில் தனி கவனம் செலுத்த வேண்டும் இல்லை என்றால் மறுமையில் அது தனக்கு எதிராக மாறுவதை என்ன விலை கொடுத்தாலும் தடுக்க முடியாது அங்கு என்ன விலையும் கொடுக்க முடியாது.  
அபூதர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பொறுப்புகளை கேட்ட போது 'அபூதர்ரே நிச்சயமாக நீர் பலவீனமானவர் அப்பொறுப்போ மிகப் பளுவான அமானிதமாகும். அதனை உரிய முறையில் நிறைவேற்றாதவருக்கு மறுமையில் அதுவே சாபமாகவும் இழிவாகவும் மாறிவிடும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். முஸ்லிம்.
இரு வகுப்பாருக்கு மத்தியிலான பிரச்சனை.

இன்றைய நடாளுவோருக்கு பதவி மோகம் மட்டுமே குறிக்கோளாக இருப்பதால் நாட்டுக்குள் மக்கள் அற்ப காரியங்களுக்காக கடும் கோபம் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதைப் பற்றி கவலைப்படுவதில்லை.
அதே போன்று பல மதங்களைச் சார்ந்த மக்கள் வாழக் கூடிய நாடுகளில் இரண்டு வகுப்பைச் சார்ந்த இருவர் புரிந்துணர்வு இல்லாமல் மோதிக் கொண்டால் நாடாளுவோர் எந்த வகுப்பைச் சார்ந்தவராக இருக்கிறாரோ ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக அவருக்கு (அந்த வகுப்பாருக்கு) கண்மூடித்தனமான ஆதரவளித்து மதக்கலவரம் மூளுவதற்கு அவரேக் காரணமாகி விடுகிறார்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஆட்சி செய்த காலத்தில் யூதர்களும் அவர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்து அனைத்து விதமான சலுகைகளையும் உரிமைகளையும் அடைந்து வந்தனர். அவர்கள் அடக்கப்பட வில்லை, ஒடுக்கப்டவில்லை, குரல்வளைகள் நெறிக்கப்படவில்லை.
யூதர்களில் ஒருவர் (அன்சாரி ஒருவரிடம்) தம் முகத்தில் அறைவாங்கிக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'முஹம்மதே! உங்கள் அன்சாரித் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்'' என்றுக் கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவரைக் கூப்பிடுங்கள்'' என்று கூறினார்கள். உடனே மக்கள் அவரை அழைத்(து வந்)தனர். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் இவர் முகத்தில் ஏன் அறைந்தீர்கள்?' என்று கேட்க அவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் åதர்களைக் கடந்து சென்றேன். அப்போது இவர், 'மனிதர்கள் அனைவரிலும் மூஸாவை (சிறந்தவராக)த் தேர்ந்தெடுத்தவன் மீதாணையாக!'' என்று சொல்லக் கேட்டேன். உடனே நான், 'முஹம்மதை விடவுமா?' என்று கேட்டேன். எனக்குக் கோபம் மேலிட, நான் இவரை அறைந்துவிட்டேன்'' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இறைத்தூதர்களுக்கிடையே என்னைச் சிறந்தவர் ஆக்காதீர்கள். ஏனெனில், மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையாகிவிடுவார்கள். மூர்ச்சை தெளிந்து எழுகிறவர்களில் முதல் ஆளாக நான் இருப்பேன். அப்போது நான் மூஸாவின் அருகே இருப்பேன். அவர் இறைவனுடைய அரியாசனத்தின் (அர்»ன்) கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பார். அவர் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டாரா, அல்லது 'தூர்சீனா' மலையில் (இறைவனைச் சந்திக்கச் சென்றபோது) அடைந்த மூர்ச்சைக்கு பதிலாக இங்கு (மூர்ச்சையாக்கப்படாமல்) விட்டுவிடப்பட்டாரா என்று எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள். 4638. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்
மேற்காணும் சம்பவத்தை கவனிக்க வேண்டும் அன்சாரித் தோழர் முஸ்லீம் என்பதுடன் நபியவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் இன்னும் நபியவர்களுக்கு ஆதரவாகத் தான் அந்த அறை யூதரின் முகத்தை பதம் பார்த்தது என்பதால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடைய இடத்தில் வேறு யாராக இருந்தாலும் அன்சாரி அவர்களுக்குத் தான் ஆதரவாக தீர்ப்பு அமைந்திருக்கும் ஆனால் ஆட்சித் தலைவராகிய அண்ணல் அவர்களிடம் புகாரளித்த யூதர் அந்நாட்டு பிரஜை என்பதால் பிரச்சனையின் தீவிரத்தை அறிந்த நபியவர்கள் சாதி,மதம் பார்க்காமல் வேண்டியப்பட்டவர், தூரமானவர் என்றுப் பாராமல் எது உண்மையோ அதைப் பேசினார்கள் இதனால் யூதரும் திருப்தி அடைந்தார் அன்சாரியும் திருப்தி அடைந்தார் பிரச்சனை இலகுவாக தீர்க்கப்பட்டது. இல்லை என்றால் அது மதக் கலவரமாக மாறி இருக்கும்.
அண்டை நாட்டு சதி திட்டத்திற்கு பலி கடாவாக மாறும் நிலை.

இரு சாரார் மத்தியில் அல்லது இரு வகுப்பார் மத்தியில் நிகழும் பிரச்சனைகளை நீதியுடன் அணுகாதக்  காரணத்தால் அது ஆட்சிக்கு பங்கமாக மாறுவதுடன் எதிரி நாடு ஒரு சாராரை கைக்குள் போட்டுக் கொண்டு உள்ளே நுழைந்து ஆதிக்கம் செலுத்தி கலவரத்தைத் தூண்டி விடுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது இது போன்ற சதி திட்டங்கள் அன்றும் நடந்தது.
கஅப் இப்னு மாலிக்(ரலி) அவர்களுடன் இரு நபித் தோழர்கள் மிகவும் முக்கியமான போராகிய தபூக் போரில் தகுந்தக் காரணமின்றி பங்கெடுத்துக் கொள்ளாமல் பின்தங்கி விட்டக்காரணத்தால் அவர்கள் விஷயமாக அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு வரும் வரை மக்கள் தொடர்பிலிருந்து அவர்கள்  நீக்கி வைக்கப்பட்டிருந்தனர்.
இதை அறிந்த அண்டை நாட்டு மன்னன் அம்மூவரையும் தன்னுடன் இணைத்துக் கொள்ள சதி திட்டம் தீட்டினான். இறை நம்பிக்கையில் உறுதியுடன் இருந்த கஅப் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் அந்த சதி திட்டத்தை முறியடித்தார்கள்   .

.. நிலைமை இவ்வாறு நீடித்துக் கொண்டிருக்க) ஒரு நாள் மதீனாவின் கடைத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது மதீனாவிற்கு உணவு தானிய விற்பனைக்காக வந்திருந்த ஷாம் நாட்டு விவசாயிகளில் ஒருவர், 'கஅப் இப்னு மாலிக்கை எனக்கு அறிவித்துத் தருவது யார்?' என்று (என்னைக் குறித்து) விசாரித்துக் கொண்டிருந்தார். மக்கள் (என்னை நோக்கி) அவரிடம் சைகை செய்யலாயினர். உடனே, அவர் என்னிடம் வந்து, 'ஃகஸ்ஸான்' நாட்டின் அரசனிடமிருந்து (எனக்கு எழுதப்பட்டிருந்த) கடிதமொன்றைத் தந்தார். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:
நிற்க! உங்கள் தோழர் (முஹம்மது) உங்களைப் புறக்கணித்து (ஒதுக்கி)விட்டார் என்று எனக்குச் செய்தி எட்டியது. உங்களை இழிவு செய்து (உங்கள் உரிமைகள்) வீணடிக்கப்படும் நாட்டில் நீங்கள் நீடிக்க வேண்டுமென்ற அவசியத்தை உங்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. எனவே, எங்களிடம் வந்துவிடுங்கள். நாங்கள் உங்களிடம் நேசம் காட்டுகிறோம்.(என்று எழுதப்பட்டிருந்தது.
இதை நான் படித்தபோது, 'இது இன்னொரு சோதனையாயிற்றே!'' என்று (என் மனத்திற்குள்) கூறிக்கொண்டு அதை எடுத்துச்சென்று (ரொட்டி சுடும்) அடுப்பிலிட்டு எரித்துவிட்டேன். .. நூல் புகாரி: 4418. கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
கஅப் இப்னு மாலிக் (ரலி)அவர்கள் மனிதர் என்ற ரீதியில் ஒரு தவறைச் செய்து விட்டாலும் பொய் சத்தியம் செய்து அந்த தவறை மறைக்கவும் இல்லை, செய்த தவறுக்காக வருந்தாமலும் இருந்ததில்லை மக்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டக் காரணத்தால் கோபமடைந்து உள்ளத்தில் சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்த திருக்குர்ஆனின் ஒளியிலிருந்து விலகி மீண்டும் குஃப்ர் எனும் இருளில் மூழ்க அவர் தயாராக இல்லை.
அக்கடிதம் விஷயமாக பிறகு யோசிப்போம் இது மன்னனிடமிருந்து வந்தக் கடிதமாயிற்றே என்று நினைத்து அக்கடிதத்தை பாதுகாத்து வைக்காமலும் இது மிகப் பெரிய ஃபித்னா இதை உடனடியாக முடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அந்த கடிதத்தை கொளுத்தியே விட்டார்கள்.
இந்த நற்செயலுக்காக அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய விலை மதிக்க முடியாத போனஸ் அவனது கிருபையினால் அவருடைய தவறை மன்னித்து உலகம் முடியும் காலம் வரை சங்கை மிக்க குர்ஆனில் இடம் பெறச் செய்தான்.
திருக்குர்ஆனின் உபதேச வாழ்க்கையை விட்டு விலகி விடக் கூடாது என்ற உறுதிப்பாட்டில் அவர்கள் இருந்தக் காரணத்தால் அவர்களின் உள்ளத்தை அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களின் தவறை மன்னித்து அவர்களை தடுக்கப்பட்டிருந்த மக்களுடன் இணைத்து விட்டான்.
9:118. தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான்.) பூமி விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது சுருங்கி விட்டது. அவர்களது உள்ளங்களும் சுருங்கி விட்டன. அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க) அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்  நிகரற்ற அன்புடையோன்.210
அவர்கள் ஈமானில் உறுதி இல்லாதவர்களாக இருந்திருந்தால் பக்கத்து நாட்டு அரசனுடைய பகட்டு வார்த்தையில் மயங்கி சோரம் போயிருப்பார்கள் கட்டுக்கோப்பான மதீனாவில் குழப்பத்தை ஏற்படுத்தி பிளவை உண்டு பண்ண அண்டை நாட்டு அரசனுக்கு இது சாதகமாக அமைந்திருக்கும்.
இன்று ஈமானில் உறுதியற்றவர்கள் அற்ப விஷயத்திற்காக அரசனின் மீது கோபம் கொண்டு அண்டை நாட்டு அரசனுக்கு விலை போய் தேசதுரோக செயல்களை செய்வதற்கு துணிந்து விடுகின்றனர்.

தலைக்கு மேல் தொங்கும் கத்தி.

இன்று அரபு நாடுகளில் நடக்கும் குழப்பங்களுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது.
இதனால் தான் என்னை அங்கே அழைத்துச் செல்லுங்கள் நான் அவர்களுடைய பிரச்சனையை முதலில் தீர்த்து வைக்கிறேன் என்று அகில உலகுக்கும் அழகிய முன்மாதிரியாக அனுப்பபட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இப்னு உபையின் கலவரப் பகுதிக்கு நேரடியாகசச் சென்று குழப்பத்தை தீர்த்து வைத்தார்கள், கஃஅப் இப்னு மாலிக் (ரலி அவர்களுடைய பிரச்சனையை அல்லாஹ்விடம் ஒப்படைத்து அல்லாஹ்வின் தீர்ப்பு வந்ததும் அத்தீர்ப்புக்கு மாற்றம் செய்யாமல் அவர்களை ஆரத் தழுவிக் கொண்டார்கள் இதனால் இறையருள் நிறைந்த அண்ணல் அவர்களின் ஆட்சி காலத்தில் நடந்தது.அண்டை நாட்டு ஆதிக்கம் திரைமறைவில் இயங்க வில்லை.
தலைமை பொறுப்பு என்பது தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தியைப் போன்றது என்று அறிஞர்கள் கூறினார்கள்.
மக்கள் மத்தியில் நிகழும் குழப்பங்களை தீர்த்து வைத்து நாட்டில் அமைதி தவழச் செய்யாத தலைவர்களுக்கு  அந்த கத்தி மறுமையில் அவர்களது உச்சந்தலையில் விழுவதாக அமைந்து விடும்.
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. அவரவர் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளியாவார். தம் குடிமக்கள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் '' புகாரி  '2751.
மக்களில் இரு சாரார் கோபமாக மோதிக்கொண்டால் அதைத் தீர்த்து வைக்க கடமைப்பட்ட  தலைவர் கடும் கோபத்துடன் ஒரு சாராரை ஆதரித்து மற்றொரு சாராரை வெட்டித் தள்ளுங்கள், சுட்டுத் தள்ளுங்கள் என்ற உத்தரவைப் பிறப்பிக்கும் அவல நிலையே இன்று நடக்கிறது.
5:8. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமரிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.

பொறுமையைக் கையாள வேண்டும்

தலைவரும் மனிதன் தான் நமக்கு வருவதைப்போன்றே அவருக்கும் கோபம் வரும் இறைவனைப் போன்று எந்த மனிதனாலும் தீர்ப்பளிக்க முடியாது என்பதால் மன்னர் அல்லது தலைவர் அநீதி இழைத்து விட்டாலும் மக்கள் கஃஅப் இப்னு மாலிக்(ரலி) அவர்களைப் போன்று உறுதிப் பாட்டுடன் நின்று கொள்ள வேண்டும்.

கோபம் சம்மந்தமாக அல்லாஹ் நாடினால் இன்னும் எழுதுவோம் 
....


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக