திங்கள், 9 ஜூலை, 2012

.


ஏகஇறைவனின் திருப்பெயரால்....
خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ {199
7:199. பெருந்தன்மையை மேற்கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

கடந்த கட்டுரையில் கோபத்தின் இரண்டு வகைகளைப் பார்த்தோம் ஒன்று தீய விளைவுகளை ஏற்படுத்க கூடியது. மற்றொன்று நன்மைகளை குவிக்கக் கூடியது.

எந்தெந்த இடங்களில் கோபத்தை கட்டுப்படுத்தினால் தீய விளைவுகளைத் தடுக்கலாம், எந்தெந்த இடங்களில் கோபத்தை வெளிப்படுத்தினால் நன்மைகளை குவிக்கலாம் என்பதையும் பார்த்தோம்.

நம்மையும் மீறி கோபத்தை வெளிப்படுத்தக் கூடாத இடத்தில் வெளிப்படுத்தி மரியாதைக்குரியவர்களிடம்  மரியாதை குறைவாக நடக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டால் வருத்தம் தெரிவித்துக் கொள்ள வேண்டும், முடியவில்லை என்றால் ஸலாமை எத்தி வைத்துக்கொண்டிருக்க வேண்டும் ஸலாம் உறவை இணைக்கும் பாலமாக அமைந்து விடும் என்றும் பார்த்தோம். இன்னும் கோபத்தின் சில ஒழுங்குமுறைகளை இக்கட்டுரையில் காண இருக்கிறோம்.

தலைவருக்கு கோபம் ஏற்பட்டால்...
ஜமாத் தலைவரை சந்தித்து அவரிடம் உள்ளக் குறையை கூறி தெளிவு படுத்துவதற்கு அல்லது அவரால் நமக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அதைக் கூறி நியாயம் பெறுவதற்காக அவருடனான சந்திப்பின் போது அவர் நம்மீது கோபப்பட்டு விட்டால் அதை எப்படி சமாளிப்பது
நம்முடைய அறிவில் தோன்றியதை எடுத்துக் கூறி அவரது கோபத்தை கட்டுப்படுத்தலாம் என்று எண்ணி விடக் கூடாது காரணம் நம்முடைய அறிவில் தோன்றுவதை விட நிர்வாகம் செய்யக் கூடிய அவருடைய அறிவில் சிறப்பாக தோன்றும். அல்லது நம்முடைய அறிவில் தோன்றியது சரியாக அவருக்குப் பட்டாலும் அவர் வகிக்கும் பதவி அதை ஏற்க மறுக்கும்.

அதனால் நம்முடைய அறிவையும், அவருடைய அறிவையும் மிஞ்சக் கூடிய அளவுக்கு அவரையும், நம்மையும் படைத்து அறிவுக் கண்களை திறக்கச் செய்வதற்காக அல்லாஹ் அருளிய அருள் மறைக் குர்ஆனிலிருந்தும் அருள்மறைக் குர்ஆனாக வாழ்க்கையை அமைத்துக் கொண்ட அறிவின் பொக்கிஷம் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அழகிய உபதேசங்களிலிருந்தும் எடுத்துக்கூறி அவருடைய கோபத்தைத் தணித்து நியாயம் பெற முயற்சிக்க வேண்டும்.

அவர் எப்படிப்பட்ட குணமுடையவராக இருந்தாலும் அல்லாஹ் இப்படித்தான் கூறி இருக்கின்றான் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் இப்படித் தான் கூறி இருக்கின்றார்கள் என்று எடுத்துரைத்தால் ஏற்றுக் கொள்வார்.

அவர் உறுதியான இறை நம்பிக்கையாளராக இருந்தால் அடங்கி விடுவார் அவரது கடும் கோபம் பறந்து விடும். இறைநம்பிக்கையில் உறுதி இல்லை என்றால் அல்லது அப்படியும், இப்படியும் என்றால் அதற்கு தகுந்தவாறே அவர் அடங்குவார்.

ஆனால் நாம் அந்த நம்பிக்கையிலிருந்து பின் வாங்கி விடக் கூடாது. இவரிடமா இதைக் கூறுவது இவர் இதை ஏற்றுக் கொள்வாரா ? நேரத்தை ஏன் வீணாக்க வேண்டும் என்று நம்பிக்கை இழந்து வேறு நடிவடிக்கைகளில் இறங்கி விடக் கூடாது.

வரலாற்றில் ஓர் நாள்.
இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் உமர்(ரலி)அவர்கள் சிறந்த நிர்வாகி என்பதை முஸ்லீம்கள் மட்டுமல்லாமல் முஸ்லீமல்லாத சிந்தனைவாதிகள், சீர்திருத்தவாதிகள், சிறந்த வரலாற்றாசிரியர்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம், ஆனால் உமர்(ரலி)அவர்கள் பட்டென கோபப்படக் கூடியவர்கள்.

உமர்(ரலி) அவர்கள் மூலமாக அநீதி இழைக்கப்பட்டதாகக் கருதிய ஒரு நபித் தோழர் உமர்(ரலி) அவர்களை நேரில் சந்தித்துக் கூறி நியாயம் பெற வேண்டும் என்று எண்ணினார். உமர்(ரலி) அவர்கள் ஜனாதிபதி என்பதால் அவர்களை சந்திக்க அவருக்கு நெருக்கமானவரைக் கொண்டு ஏற்பாடு செய்து சந்திப்பும் நடந்தது. அந்த சந்திப்பில் உமர்(ரலி) அவர்களுக்கு கோபம் வந்து விட்டது அந்த கோபத்தை எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டது என்பதை கீழ்காணும் சம்பவத்தில் படிப்பினை பெறலாம்.

உயைனா இப்னு ஹிஸ்ன் இப்னி ஹுதைஃபா (ரலி) (மதீனாவுக்கு) வந்து, தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு இப்னு கைஸ்(ரலி) அவர்களிடம் தங்கினார். உமர்(ரலி) தம் அருகில் அமர்த்திக்கொள்பவர்களில் ஒருவராக (அந்த அளவுக்கு அவர்களுக்கு நெருக்கமானவராக) ஹுர்ரு இப்னு கைஸ் இருந்தார். முதியவர்களோ இளைஞர்களோ யாராயினும், குர்ஆனை நன்கறிந்தவர்களே உமர்(ரலி) அவர்களின் அவையினராகவும் ஆலோசகர்களாகவும் இருந்தனர். எனவே, உயைனா, தம் சகோதரருடைய புதல்வரிடம், என் சகோதரர் மகனே! உனக்கு இந்தத் தலைவரிடம் செல்வாக்கு உள்ளது. எனவே, அவரைச் சந்திக்க எனக்கு அனுமதி பெற்றுத் தா'' என்று கூறினார். அதற்கு அவர், 'உமர்(ரலி) அவர்களிடம் செல்ல நான் உமக்காக அனுமதி கேட்கிறேன்'' என்று கூறினார். அவ்வாறே உமரைச் சந்திக்க உயைனாவுக்காக ஹுர்ரு அவர்கள் அனுமதி கேட்டார். உமர்(ரலி) அவர்களும் அவருக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதி கொடுத்தார்கள். உயைனா அவர்கள் உமர்(ரலி) அவர்களிடம் சென்றபோது, 'கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை. எங்களிடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பளிப்பதில்லை என்று கூறினார். உமர்(ரலி) கோபமுற்று அவரை நாடி (அடிக்க)ச் சென்றார்கள். உடனே ஹுர்ரு அவர்கள் உமர்(ரலி) அவர்களை நோக்கி, 'இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! உயர்ந்தோனான அல்லாஹ் தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு, '(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும் அறிவீனர்களைவிட்டு விலகியிருப்பீராக! (திருக்குர்ஆன் 07:199) என்று கூறியுள்ளான். இவர் அறியாதவர்களில் ஒருவர் என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுர்ரு அவர்கள் இந்த வசனத்தை உமர்(ரலி) அவர்களுக்கு ஓதிக் காட்டியபோது உமர்(ரலி) அதை மீறவில்லை. (பொதுவாக) உமர்(ரலி) இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படக்கூடியவர்களாய் இருந்தார்கள். 4642. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

மேற்காணும் இறைவசனத்தை உமர்(ரலி) அவர்களுடைய ஆலோசகர் ஓதிக் காண்பித்த உடன்  அவர்களுடைய கோபம் காற்றாய் பறந்து விட்டது. உமர்(ரலி) அவர்கள் பட்டென கையை நீட்டும் அளவுக்கு கோபமுடையவர்கள் தான் ஆனால் அவர்களுக்கு எவ்வளவுப் பெரிய கோபமாக இருந்தாலும் அவர்களிடத்தில் அல்லாஹ்வின் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் ஓதப் பட்டால் அது அவர்களின் மீது தென்றலாய் தவழ்ந்து அவர்களை குளிரச் செய்து விடும் நிகழ்வுகள் அவர்களின் வாழ்வில் பல முறை நிகழ்ந்துள்ளது. உமர்(ரலி) அவர்கள் குர்ஆனுக்கும், நபிவழிக்கும் கட்டுப்பட்டவர்கள் அவர்;களுக்கு ஆலோசகர்களாக மார்க்க அறிஞர்களையே நியமித்திருந்தார்கள் அதனாலேயே அவர்கள் ஆட்சி காலம் பொற்காலமாகத்திகழ்ந்தது.

நம்மில் சிலர் இருக்கின்றனர் நான் ஸட்ரைட் ஃபார்வார்டு ஆசாமியாக்கும் எனக்கு தோன்றியதை பளிச்சென்று பேசி விடுவேன் தப்பென்றால் தப்புத் தான் அதில் தயவு தாட்சன்யம் அறவே கிடையாது ஹக்கை எடுத்துச் சொல்வதில் தயக்கம் என்ன ? அவர் யாராக இருந்தால் எனக்கென்ன ?   தலையா எடுத்து விடுவார் ? தலையை எடுத்தால் எடுக்கட்டுமே என்றெல்லாம் விதண்டாவாதம் பேசி ஜமாத் தலைவர் அல்லது அதிகாரியை சந்திக்கும் பொழுது உள்ளத்தில் தோன்றியதை எதையாவது ஏடா கூடமாகப் பேசி கிடைத்துக் கொண்டிருக்கும் உரிமையும் கிடைக்க விடாமல் இழைக்கப்பட்ட அநீதிக்கும் நியாயம் கிடைக்காமல் பண்ணுவதுடன் தெருவுக்குள், ஊருக்குள் நிம்மதி இல்லாமல் ஆக்கி விடுவர்.

காரணம் இன்றைய ஜமாத் தலைவர்களில் அதிகமானோர் அவர்கள் வகிக்கும் தலைமைப் பதவி அவர்களை தலைக்கனம் பிடிக்க வைத்து விடுகிறது அதனால் சட்டென கோபம் கொள்பவர்களாக உள்ளதைப் பார்க்கிறோம். அவர்களில் பலர் தங்களுடைய பிற நிர்வாகிகள் மார்க்க அறிஞர்களாக இருக்க வேண்டும் அல்லது மார்க்க அறிவு உள்ளவர்களாகவாவது இருக்க வேண்டும் என்று எண்ணுவதில்லை அதனால் அவர்களுடன் இருப்பவர்கள் அவர்கள் அடையும் அர்த்தமற்ற கோபத்தை தணிக்க முயலுவதில்லை மாறாக தூண்டி விடும் அவல நிலையே உருவாகிறது.

அதனால் குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமுதாயமாகிய நாம் ஜமாத் தலைவரை அல்லது அதிகாரிகளை சந்திக்கச் சென்றால் அவர் நம்மீது கோபம் கொள்ளாதவாறு மென்மையாக நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் ஒரு வேளை கடும் கோபம் கொண்டால் மார்க்க சட்டங்களை எடுத்துக் கூறி அவரை குளிரச் செய்ய முயற்சிக்க வேண்டும். காரணம் உமர் (ரலி) அவர்களைப் போன்று மார்க்க அறிஞர்களை தங்களுக்கு உதவியாளர்களாக, ஆலோசகர்களாக நியமித்துக்கொள்வதை பெரும்பான்மை இஸ்லாமிய நாட்டு மன்னர்களே தவிர்த்து வருகின்றனர். அதனால் சாதாரண ஜமாத் தலைவரிடமோ, அதிகாரிகளிடமோ காண்பது அரிது.

அமீருக்கு கோபம் ஏற்பட்டால்... 
அமீர் கடும் கோபத்தில் இருக்கும் போது எதையாவது உத்தரவிட்டால் அதற்கும் கட்டு பட்டேத் தீர வேண்டும் அவர் கோபத்தில் இருக்கும் போது உத்தரவிட்டாலும், நிதானமாக இருக்கும் போது உத்தரவிட்டாலும் சரியே என்ற நிலை இன்று நம்மில் பலரிடம் காணப் படுகிறது. கழுவுபவரின் கைகளுக்குள் கட்டுண்டு கிடக்கும் மையித்தைப் போல் ஆகாதவரை அமீருக்கு கட்டுப்பட்டவனாக மாட்டான் எனும் சில அமீர்களின் முரட்டுப் பிடிவாதம் அப்பாவிகளின் மீது அரங்கேற்றப்பட்டு விட்டது.

இவ்வாறான கட்டளைக்கு இஸ்லாத்தில் அறவே இடமில்லை அமீர் கோபத்தில் மார்க்கத்திற்கு விரோதமாக அல்லது மனித உரிமைக்கு மாற்றமாக எதையாவது உத்தரவிட்டால் அவரின் கோபத்தையும் தனிக்க முற்சிக்க வேண்டும் அவருடைய கோபம் தனிந்ததும் அந்த உத்தரவை மாற்ற முயற்சிக்க வேண்டும்.

வரலாற்றில் ஓர் நாள்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி, அவர்களுக்கு அன்சாரிகளில் ஒருவரைத் தளபதியாக்கி, அவருக்குக் கட்டுப்பட்டு நடக்கும்படி படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்கள். அந்த அன்சாரி (ஒரு கட்டத்தில்) படைவீரர்களின் மீது கோபம் கொண்டு, 'நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லையா?' என்று கேட்டார். அவர்கள், 'ஆம்'' என்றனர். அவர், 'விறகைச் சேகரித்து நெருப்பை மூட்டி அதில் புகுந்து விடும்படி உங்களுக்கு நான் உத்தரவிடுகிறேன்'' என்றார். அவ்வாறே அவர்கள் விறகைச் சேகரித்து நெப்பை மூட்டினர். அதில் நுழைய நினைத்தபோது ஒருவரையொருவர் பார்த்தபடி நின்று கொண்டனர். அவர்களில் ஒருவர், '(நரக) நெருப்பிலிருந்து தப்பிக்கத்தானே நாம் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றினோம்; அவ்வாறிருக்க, அதில் நாம் நுழைய வேண்டுமா?' என்று கேட்டார். இதற்கிடையே நெருப்பும் அணைந்தது அவரின் கோபமும் தணிந்தது. பிறகு நபி(ஸல்) அவர்களிடம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அதில் மட்டும் அவர்கள் புகுந்திருந்தால் அதிலிருந்து ஒருபோதும் வெளியேறிருக்கமாட்டார்கள்; கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில் தான்'' என்றார்கள். 7145 அலீ(ரலி) அறிவித்தார்.

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் போர் படை தளபதிக்கு (போர் முடியும் வரை போர் சம்மந்தமான செயல் பாடுகளுக்கு மட்டும் தான்) கட்டுப்படக் கூறினார்கள். ( இதன் மூலம் அமீர் என்பது தற்காலிக நியமனம் தான் நிரந்தர காலத்திற்கு அல்ல என்பது தெளிவாகும் ) ஆனால் போர் படைத் தளபதியோ அந்த உத்தரவை கோபத்தில் வேறு மாதிரியாக பயன்படுத்தத் தொடங்கிய போது அதை போர் வீரர்களும் உடனடியாக மறுக்காமல் செயல்படுத்துவது போல் காட்டிக்கொண்டனர். செயல்படத் தொடங்கியதும் படைத் தளபதிக்கு சிறிது கோபம் தணிவதைக் கண்டதும் தளபதி புரிந்து கொள்ளும் விதமாக மார்க்க செய்தியைக் கூறி முழு டீகுhபத்தையும் தணிய வைத்து விடுகின்றனர்.

படைத் தளபதியின் முழு கோபமும் தணிந்து விட்டதால் போர் வீரர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று தனது நிலையை மாற்றிக் கொள்கிறார்.

மேற்காணும் சம்பவம் அண்ணல் அவர்களிடம் சொல்லிக் காட்டியதும் போர் வீரர்கள் கையாண்ட விதத்தைப் பாராட்டி வரவேற்றார்கள் மாறாக அதெப்படி தளபதி சொல்லியதற்கு மாறாக நடந்தீர்கள் என்று கடிந்து கொள்ள வில்லை.

ஒரு நன்மை விளையும் என்றால் மட்டுமே கடும் கோபத்தில் அமீர் இடும் கட்டளையை நிறைவேற்றத் துணியலாம் தீமை விளையும் என்று தௌ;ளத் தெளிவாக அறிந்தால் கோபம் தணியும் வரை பொறுத்திருந்து அவருக்கு மார்க்க அடிப்படையிலான தகவல்களைக் கூறி அவருடைய உத்தரவை மாற்ற முயற்சிக்க வேண்டும்.

கடந்த கட்டுரையில் தாய் தந்தையர், மூத்த சகோதர சகோதரிகள், மூத்த வயதையுடைய தூரத்து உறவினர்கள், மார்க்க அறிஞர்கள் கோபப்பட்டால் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒழுங்கு முறைகளையும், இந்த கட்டுரையில் ஜமாத் தலைவர், அதிகாரிகளுக்கு கோபம் எற்பட்டால் எப்படி நடந்து கௌ;ள வேண்டும் என்பதயும் பார்த்தோம்.

இனிவரும் காலங்களில் அல்லாஹ் நாடினால் மேலும் சில ஒழுங்கு முறைகளைப் பார்ப்போம்...

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக