திங்கள், 9 ஜூலை, 2012

.

ஏகஇறைவனின் திருப்பெயரால்...
إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ {10
நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். 49:10

கோபத்தை விடக் கொடியது வறட்டு கௌரவம்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இறைவேதம் திருமறைக்குர்ஆன் வருவதற்கு முன் மக்கள் சிறு சிறு குழுவாகப் பிரிந்து ஒவ்வொருக் குழுவினரும் அற்ப காரியங்களுக்காக கடும் கோபம் கொண்டு வாளேந்தி வருடக் கணக்கில் போர் புரிந்து பூமியில் மண்டைகளை உருளச் செய்து இரத்த ஆற்றை ஓட்டிக் கொண்டிருந்தனர்.

இறைவேதம்  திருமறைக்குர்ஆன் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டப் பின் அதில் கூறப்பட்ட அழகிய உபதேசங்களை எடுத்துரைத்து அருள்மறைக் குர்ஆன் கூறும் வழியில் ஒற்றுமையை ஏற்படுத்தி சிறு சிறுக் குழுவாகப் பிரிந்து போரிட்டுக் மடிந்தவர்களை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் இணக்கத்தை ஏற்படுத்தி சகோதரர்களாக்கினார்கள்.  

அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்!98. பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான். அல்குர்ஆன் 3:103.

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நம்மை விட்டு இறையடிச் சென்று விட்டாலும் ஒரு தாய் வயிற்றில் பிறவாத நம் மூதாதையரை எதனடிப்படிடையில் இணக்கத்தை ஏற்படுத்தி சகோதரர்களாக்கினார்களோ ? அதை (இறைவேதம் திருமறைக்குர்ஆனையும், அவர்களுடைய அப்பழுக்கற்ற வழிமுறைகளையும்) நம்மிடத்தில் விட்டுச் சென்றுள்ளார்கள்.

இன்று கோபத்தினால் நம்மிடம் ஏற்படும் மனஸ்தாபங்களை, அதன் மூலம் உருவாகும் பிரச்சனைகளை, பிரிவினைகளை அவர்கள் விட்டுச் சென்ற குர்ஆன்-ஹதீஸ் வழிகாட்டுதலின் அடிப்படையில் இலகுவாக தீர்த்துக்கொண்டு இணக்கத்துடன் வாழ முடியும்.
    
வழி மறிக்கும் வறட்டு கௌரவம்.

கணவன் - மனைவி, உறவினர்கள், நண்பர்கள், வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள், ஹாஸ்டலில் தங்கிப் படிப்பவர்கள் மத்தியில் சாதாரன பிரச்சனைகளுக்காகவோ அல்லது பாரிய பிரச்சனைகளுக்காகவோ கடும் கோபம் சூழ்ந்து மோதல் ஏற்பட்டு அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத அளவுப் பிரிந்து விட்டால் ? அவர்கள் இருவரும் தங்களது தவறை உணர்ந்து தாமாக இணைந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று மார்க்கம் உபதேசம் செய்கிறது.

கோபம் தணிந்தப் பின் மார்க்கம் கூறும் உபதேசத்தின் அடிப்படையில் அவர்களில் யாராவது ஒருவர் தன் தவறை உணர்ந்து இணைந்து கொள்ள முடிவு செய்தால் கோபத்தின் மூலம் சண்டையை மூட்டி அவர்களைப் பிரித்து விட்ட ஷைத்தான் வறட்டு கௌரவத்தின் மூலம் அவர்களை மீண்டும் இணைய விடாமல் தடுத்துக் கொண்டிருப்பான்.

சீ மானத்தை விட்டு வழியச் செல்வதா ?
தேவைப் பட்டால் அவர் வரட்டும் ! நாம் போக வேண்டிய அவசியமில்லை.

என்ற வறட்டு கௌரவத்தை விதைப்பான். அதாவது இணைந்து விடுவோம் என்ற எண்ணம் இருவருக்கும் ஏற்பட்டாலும் வழியப் போய் இணைய வேண்டியதில்லை என்பதில் இருவரும் உறுதியாக இருப்பர்.

இதே எண்ண ஓட்டத்தில் ஒரு தொகை நாட்கள் கழிந்து கொண்டிருக்கும் நாட்கள் ஆக ஆக இந்த எண்ணமும் மாறி இனித் தேவை இல்லை என்ற அடுத்த முடிவு உதயமாகி விடும்.

இது அதிகமாக கணவன் - மனைவிக்குள் ஏற்படுவதுண்டு இதில் அதிகமானோர் இனி அவர் சரியா வர மாட்டார், இனி அவள் சரியா வர மாட்டாள் என்ற விரக்தி அடைந்து தங்களுக்கு அடுத்த துணையை தேர்வு செய்து கொண்டு அல்லது தேர்வு செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டு நிரந்தரமாப் பிரிந்து விடுவதுமுண்டு. கோபத்தை விடக் கொடியது வறட்டு கௌரவம்.

பிரிவினையைத் தூண்டும் கடும் கோபத்தை ஏற்படுத்துவது, மீண்டும் இணைய விடாமல் வறட்டு கௌரவத்தை உள்ளத்தில் விதைப்பது போன்ற செயல்கள் ஷைத்தானின் புறத்திலிருந்து வருவதாகும். 

சமாதானக் குழுவை நியமிக்க வேண்டும்
இணைந்து கொள்வோம் என்ற நற்சிந்தனை உதமாகியும் இணைய முடியாமல் வறட்டு கௌரவத்தால் தடைப் பட்டு நிற்போரை சுற்றார், உற்றார் உறவினர்களில் ஒருக் குழுவை நியமித்து இணக்கத்தை ஏற்படுத்தும் படி அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். 49:10

சமாதானக் குழுவின் மூலம் இணைவதை இருவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வார்கள் இதில் யாருக்கும் வழியச் செல்வதா என்ற வறட்டு கௌரவத்திற்கு வேலை இல்லாமல் போய் விடும்.

ஒரு இயந்திரத்தை உருவாக்கிய மனிதன் அதில் பழுது ஏற்பட்டால் அதை எவ்வாறு நீக்க வேண்டும் என்பதையும் அறிந்தே வைத்திருப்பான். சாதாரண இயந்திரத்தை உருவாக்கிய மனிதனே பழுது நீக்கும் முறையையும் அறிந்து வைத்திருக்கிறான் என்றால் மனிதனைப் படைத்த இறைவன் மனிதனிடம் ஏற்படும் பழுதை எவ்வாறு நீக்க வேண்டும் என்பதை இவ்வளவுப் பெரிய பிரபஞ்சத்தையும், எண்ணிலடங்கா உயிரினஙகளையும் படைத்து பரிபாலிக்கும் இறைவன் அறிந்து வைத்திருக்காமலிருப்பானா

வழியச் சென்று உறவைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும், இணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வாய் கிழிய தத்துவம் பேசுபவர்களும், மை தீஎழுதித் தள்ளுபவர்களும் கூட வறட்டு கௌரவத்திற்கு அடிமையாகி விடுவதுண்டு.

மனிதனைப் படைத்தப் படைப்பாளன் மனிதன் என்ன மாதிரியான குணாதிசயம் கொண்டவன் என்பதை நன்கே அறிந்து வைத்திருப்பதால் உலக வாழ்வையும், மறுமை வாழ்வையும் சீரழிக்கும் இந்த மோசமான வறட்டு கௌரவத்தை உடைத்தெறிவதற்கு சமாதானக்குழுவினரால் மட்டுமே முடியும் என்பதை அறிந்து வைத்திருந்ததால் சமாதானக்குழுவை நியமித்து இணக்கத்தை ஏற்படுத்தும்படி அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கட்டளையிட்டான்.

இஸ்லாம் நடைமுறைக்கேற்ற மார்க்கம் தான் இஸ்லாத்தை இறைவன் தான் மனித குலத்தின் நன்மைக்காக, நேர்வழிக்காக அருளினான் என்பதற்கு இதைவிட வேறு சான்றுத் தேவை இருக்காது.  

உடல் உறுப்புகளில் ஏற்படும் பழுதுகளை மருத்துவர்கள் நீக்கி விடுவார்கள் உள்ளத்தில் ஏற்படும் பழுதுகளை இறை வழியில் தான் நீக்க முடியும். 

உள்ளத்தில் ஏற்படும் பழுதுகளை இறைவழியில் நீக்க முயலாதவர்கள் மொத்த உடலையே அழித்துக் கொண்டதுமுண்டு,

உள்ளத்தில் உருவாகும் மோசமான பழுது தான் கோபத்தின் மூலம் உருவாகும் வறட்டு கௌரவமும், முரட்டுப் பிடிவாதமும் ஆகும். 

நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் அரும் பணிகள் இறைநம்பிக்கையாளர்கள் மீது இறைவன் விதித்திருப்பவைகளில் முக்கியமான அரும்பணியாக இடம்பெறுவது இணக்கத்தை ஏற்படுத்தும் அரும்பணியாகும். இதில் ஈடுபடுபவர்களின் மீது அல்லாஹ்வின் அருள்மழை எந்நேரமும் பொழிந்துக் கொண்டே இருக்கும்.  இந்த விஷயத்தில் இறைநம்பிக்கையாளர்கள் முந்திக் கொள்ள வேண்டும். ...இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். 49:10

ஒழுங்கு முறைகள்.
இதில் கணவன்- மனைவி மட்டும் சமாதானக் குழு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் முன்கூட்டியே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பிரச்சனையை உடனடியாக தாங்களாகவே முடித்துக் கொள்ள முன் வர வேண்டும்.

தாமதமானால் தாமதமாகும் ஒவ்வொரு நொடிப் பொழுதும் முடிவுகள் மாறிக் கொண்டே சென்று சமாதானக் குழு செல்வதற்குள் கதை முடிவதற்கான நேரம் நெருங்கி விட்டிருக்கும். அதனால் தங்களுக்குள்ளேயே சமாதானத்தை மேற்கொள்ள வேண்டும். வறட்டு கௌரவத்திற்கு இடமளித்தால் வாழ்வே நாசமாகி விடும்.

தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே நல்ல முறையில் சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது...4:128 

தங்களுக்குள் விட்டுக் கொடுத்து பிரச்சனையை முடித்துக் கொள்ள அவர்கள் தயாரில்லை என்றால் அவர்களுக்குள் உருவான பிரச்சனை பெரிய அளவில் சென்று விடலாம் என்ற அச்சம் அவர்களின் பெற்றோர்களுக்கு உருவாக வேண்டும்.

பிரச்சனை வெடித்து வீதிக்குப் போவதற்கு முன் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் பிரச்சனையை காதும் காதும் வைத்தாற் போல் முடித்து விடுவதற்கு அவர்களின் இரு குடும்பத்திலும் ஒருவர் வீதம் இருவர் இறங்கி தாமதமின்றி அவர்களை சமாதனப்படுத்தி இணைத்து விட முன் வரவேண்டும்.

அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.4:35

இது இனி சரியா வராது இதில் நேரத்தை ஒதுக்குவது தேவையற்றது என்ற முடிவை மேற்கொண்டு சமாதானக் குழுவிற்கு ஏற்பாடு செய்வதிலிருந்து பின் வாங்குவது அல்லது சமாதானக் குழுவை நிராகரிப்பது சிறந்த முடிவன்று. காரணம் அல்லாஹ்வின் நாட்டத்தையும் நாம் அறிய முடியாது, பிரிந்து நிற்போரின் உள்ளத்தையும் நாம் அறிய முடியாது அதனால் நம்முடையப் பணி சமாதானத்தை ஏற்படுத்துவது தான்.

அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து சமாதானக்குழுவை தாமதமின்றி ஏற்படுத்த வேண்டும், சமாதானக்குழு அல்லாஹ்வுக்கு பயந்து தனது பணியைத் தொடர வேண்டும் பிரிந்து நிற்போரின் உள்ளங்களை அறிந்த அல்லாஹ் அதனடிப்படையில் அவர்களுக்கு மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்தி விடுவான். ...அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.4:35

நேர் மாறான நிலை
கணவன் - மனைவி விஷயத்தில் இரு குடும்பத்தாரும் இணைந்து அவர்களுக்கு மத்தியில் நடக்கும் பிரச்சனையை உடனடியாக முடித்து விடச் சொல்கிறான் இறைவன். ஆனால் இரு குடும்பத்திலும் கணவன்- மனைவிக்கு மத்தியில் நடக்கும் பிரச்சனையை தூண்டி விடும் அவல நிலையே இன்று சமுதாயத்தில் அதிகமாக நிலவி வருவதைப் பார்க்கிறோம்.

தன் மகனுக்கும் மருமகளுக்கும் மத்தியில் எதோ ஒருப் பிரச்சனைக் காரணமாக வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும் பொழுது தன் மகன் எதோ விவரமில்லாதவன் போல் நினைத்துக் கொண்டு அவளை இந்தளவுக்கு நீ பேச விடலாமா ? அவளுடையப் பேச்சை அடக்க உனக்குத் தெரியவில்லையே ? இந்தளவுக்கு பேச விட்டால் அவளுக்கு நீ அடிமை ஆகி விடுவாய் என்றுத் தூண்டி விடுவார்கள்.

இந்த மாதிரியானப் பேச்சுக்களை இது மாதரியான நேரங்களில் பேசுவதை இஸ்லாம் வன்மையாக கன்டிக்கிறது. உண்மையில் அந்தப் பெண் அங்கே அதிகமாக பேசிக் கொண்டிருந்தாலும் நீ தான் அதிகமாகப் பேசுகிறாய் என்று தன் மகனையே கன்டிக்க வேண்டும்.

இருவரும் சமாதானமானப் பிறகு இருவரையும் தனியே சந்தித்து உபதேசங்கள் செய்து நெருக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

தன் மருமகளைப் பற்றி மகனிடம் அவள் நல்ல மருமகள் இந்த காலத்தில் இது மாதிரியான பெண் கிடைப்பது அறிது நீ இல்லாத நேரங்களில் உன்னை அதிகமாகப் புகழ்கிறாள் என்று புனைந்துக் கூற வேண்டும். 

மகனைப் பற்றி மருமகளிடமும் மேற்காணும் விதம் புணைந்துக் கூற வேண்டும்.

(பரஸ்பரம் பிணங்கிய இரண்டு தரப்பாரிடமும்) நல்லதை (புனைந்து) சொல்லி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' அறிவிப்பாளர்: உம்மு குல்தூம் பின்த்து உக்பா(ரலி) அவர்கள். நூல்: புகாரி 2692.

அவர்கள் குடும்பத்திலிருந்து ஒருவர் வர வேண்டியத் தேவை இல்லாத அளவுக்கு இவர்களே பிரச்சனையை இலகுவாக முடித்துக் கொள்வதற்கு இதுவே சிறந்த வழி.
 
ஆனால் இன்று என்ன நடக்கிறது ? கணவன்-மனைவிக்குள் சண்டை மூண்டதும் அதை தீர்த்து வைக்கக் கடமைப்பட்டவர்களே அதை மேலும் மூட்டி விடுகின்றனர் போதாதற்கு என் மகன் மீது தவறில்லை, என் மகள் மீது தவறில்லை என்றுக் கூறி அவர்கள் இருவரும் அவர்களுடைய சண்டையை வைத்து மோதிக் கொள்கின்றனர்.
இவர்களின் பிரச்சனையை தீர்க்கவே ஒருக் குழுவை நியமிக்க வேண்டி உள்ளது அதனால் அவர்களின் நிலையோ அந்தோப் பரிதாபம் தான்.
இதனால் பிரிந்து வாழுதல் பிரச்சனை தீர்க்கப்படாமல் நீண்ட காலம் பிரிந்து வாழ்வதால் உருவாகும் கள்ளக் காதல்கள், தலாக்குகள் தலாக்கிற்குப் பின்னால் ஜமாத்தினரால் விதிக்கப்படும் பெருந்தொகையிலான அபராதங்கள், அபராதங்களை செலுத்த முடியாததால் தெரு நீக்கம்,  ஊர் நீக்கம். தெரு நீக்கம்,  ஊர் நீக்கத்தால் காவல் நிலையம் நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டும் அவல நிலை.  


குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையிலான வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் மனமுரண்டுடன் செயல்படுவதால் மேற்காணும் தீயவிளைவுகள் நடக்கின்றன.
இன்று அல்லாஹ்வின் பேருதவியால் அதிகமானப் பெண்கள் தவ்ஹீத் ஜமாத்தில் இணைந்து குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையிலான மார்க்க சொற்பொழிவுகளைக் கேட்டு வருவதால் மேற்காணும் அவலநிலைகள் ஓரளவு குறைந்து வருகிறது அல்லாஹ்வுக்கேப் புகழ் அனைத்தும்.
பெண்கள் பெருந்திரளாக தவ்ஹீத் ஜமாத்தில் இணைந்து போராட்டங்களில் ஈடுபடுவதை குறுகிய கண்ணோட்டத்தில் காணும் சகோதரர்கள் சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர். நம்மை விட அவர்களையே குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் வழிநடத்தும் தவ்ஹீத் ஜமாத்தின் கொள்கைகள் அதிகம் சென்றடைய வேண்டி உள்ளது.

பெண்களிடம் சீர்திருத்தம் வந்து விட்டதென்றால் ஒளிமயமான குடும்பம் உருவாவதை எந்த தீய சக்தியாலும் தடுக்கவே முடியாது.

தவ்ஹீத் ஜமாத் அதிக அளவில் பெண்களிடம் குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத்தை எத்தி வைத்தது அதன் சாதனைகளில் ஒரு மைல் கல் எனலாம்.
 
அல்லாஹ் நாடினால் இன்னும் சில ஒழுங்குமுறைகளை அடுத்தக் கட்டுரையில் எழுதுவோம்.


  
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக