திங்கள், 9 ஜூலை, 2012

.


ஏகஇறைவனின் திருப்பெயரால்....

فَلاَ وَرَبِّكَ لاَ يُؤْمِنُونَ حَتَّىَ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لاَ يَجِدُواْ فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُواْ تَسْلِيمًا {65

4:65. (முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.




கோபத்திலும் நீதி தவறாமை.


கடந்த கட்டுரையில் அன்பே உருவான அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களிடத்தில் கொண்டிருந்த அளவிலா அன்பையும், அவர்கள் செய்யும் சிறு பிழைகளை மன்னித்து அரவனைத்துக்கொண்ட மான்பையும் இந்த கட்டமைப்பை சிதறடிப்பதற்காக ஷைத்தான் செய்த சூழ்ச்சியை வல்ல அல்லாஹ் முறியடித்த விதத்தையும் பார்த்தோம்.

கோபம் மனிதனுக்கு வந்து விட்டால் எதிரில் இருப்பவர் யார் ? அவர் சிறியவரா ? பெரியவரா ? மரியாதைக்குரியவரா ? என்றெல்லாம் பார்க்க விடாமல் தகாத வார்த்தைகளைக்கொண்டு திட்ட வைத்து விடுவதையும் அல்லது வருத்தப்படும் விதமாக எதையாவது பேச வைத்து விடுவதையும் அதன் பிறகு அதற்காக சிலர் வருந்துவார்கள், பலர் வருந்தாமல் அப்படியே விட்டு விட்டு மறுமை வாழ்வை தொலைத்து விடுவார்கள் என்பதை அதற்கு முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

சகோதரத்துவம் என்றால் எப்படிப்பட்டது என்பதை நடைமுறையில் நடத்திக்காட்டி உலகுக்கு உணர்த்திக் காட்டியவர்கள் மதீனத்து அன்சாரிகள் என்பதை உலகறியும். 

உடன் பிறவா முஹாஜிர்களை இன்று முதல் இவர் உங்களுடைய சகோதரர் என்று அகில உலகிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளுடைய கைகளில் பிணைத்து விட்ட அடுத்த நிமிடமே தங்களுடைய சொத்துகளிலிருந்தும், தொழில்களிலிருந்தும் கனிசமான அளவு பிரித்துக்கொடுத்து அவர்களுக்கு வாழ்வாதாரம் அளித்து மகிழ்ந்தனர் அதனால் அவர்களுக்கு அன்சாரிகள் (உதவியாளர்கள்) என்ற சிறப்புப் பெயரை வல்லோன் அல்லாஹ்வே சூட்டி அவர்களை மகிழச் செய்தான்.

நான் அனஸ்(ரலி) அவர்களிடம், '(அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் குலத்தாரான உங்களுக்கு) 'அன்சார் - உதவியாளர்கள்' என்னும் பெயர் வந்ததைப் பற்றி எனக்குக் கூறுங்கள். உங்களுக்கு அந்தப் பெயர் (குர்ஆனுக்கு முன்பே) சூட்டப்பட்டிருந்ததா? அல்லது அல்லாஹ் உங்களுக்கு அந்தப் பெயரைச் சூட்டினானா?' என்று கேட்டேன். அவர்கள், 'அல்லாஹ் தான் எங்களுக்கு ('அன்சார்' என்று திருக்குர்ஆன் 9:100-ம் வசனத்தில்) பெயர் சூட்டினான். (பஸராவில்) நாங்கள் அனஸ்(ரலி) அவர்களிடம் (வந்து) சென்று கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் அன்சாரிகளின் சிறப்புகளையும் அவர்களின் (தியாக) நிகழ்ச்சிகளையும் எங்களுக்கு எடுத்துரைப்பார்கள். என்னை அல்லது 'அஸ்த்' குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை... நோக்கி, 'உன் குலத்தார் இன்னின்ன நாளில் இன்னின்னவாறு செய்தார்கள்'' என்று சொல்வார்கள். புகாரி :  3776. இப்னு ஜரீர்(ரஹ்) அறிவித்தார்

பொருளாதாரத்தில் மட்டும் உதவி செய்வதுடன் நிருத்திக் கொள்ளாமல் உடலாலும் உதவினார்கள் உயிரையே கொடுத்து அவர்களை காக்க பல தருனங்களில் தயாராகவும் இருந்தார்கள்.

அந்தளவுக்கு அன்சாரிகள் சிறப்புக்குரியவர்கள் உலகில் எந்த மூலையிலும் அன்சாரிகள் போன்று சகோதரத்திவத்திற்கு சான்றுப் பகர்ந்தவர்களை இன்றுவரை எந்த வரலாற்றாசிரியர்களாலும் சுட்டிக்காட்ட முடிவில்லை காட்ட முடியாது, வரலாற்றுப் பொன்னேடுகளில் அன்சாரிகளுக்கென்று தனி சிறப்பிடம் உண்டு.

·         இந்தக் கட்டமைப்பை பார்த்துக் கொண்டு ஷைத்தான் சும்மா இருப்பானா ?
·         இப்படிப்பட்ட ஒரு கட்டமைப்பைக் கட்டி எழுப்பிய இறைதூதரை மகிழ்ச்சியுடன் இருக்க விடுவானா ஷைத்தான் ?
·         அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மத்தியில் உள்ள பொருளாதா பங்கீட்டை அவனால் தடுத்து நிருத்தவே முடியவில்லை ?
·         அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மத்தியில் திருமனம் மூலம் அதிகரித்து செல்லும் உறவு முறைகளை அவனால் தடுத்து நிருத்தவே முடியவில்லை ?
·         இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பாசறையில் பயின்று கொண்டிருந்ததால் அன்சாரிகளையும், முஹாஜிர்களையும் நரகிற்கு செல்லும் பெரும் பாவங்களை அவனால் தூண்டவே முடிய வில்லை.

ஆனால் அவ்வப்பொழுது கோபத்தின் மூலமாக சிறிய சச்சரவுகளை ஏற்படுத்தி மனம் வருந்தும் வேலைகளை செய்து மகிழ்ந்தான். 

அவ்வாறு செய்தவற்றிவல் சில சம்பவங்கள் இறைத்தூதரின் மனதையும் வெகுவாக பாதிக்கவேச் செய்தது.

ஒரு நாள் ஸூபைர்(ரலி) அவர்கள் தங்களின் பேரீச்ச மரத் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருக்கும் பொழுது திடீரென ஒருக் குரல் நிருத்துங்கள் போதும் தண்ணீரை எனது தோட்டத்திற்கு திருப்பி விடுங்கள் என்று ஒலித்தது. அந்தக் குரலுக்கு சொந்தக் காரர் பக்கத்து தோட்டத்து (பத்ரு யுத்தத்தில் பங்கெடுத்த அல்லாஹ்வுக்கு விருப்பமான) அன்சாரி ஒருவர்.

இன்னும் எனது மரங்களுக்கு தண்ணீர் முழுமையாக சென்றடையாதக் காரணத்தால் தண்ணீரை திருப்பி விட முடியாது என்று இதற்கு ஸூபைர்(ரலி) அவர்கள் மறுத்து விட இது அவர்கள் இருவருக்கு மத்தியில் பேச்சு வார்த்தை அதிகமாகி  கோபத்தில் முடிகிறது.

இறுதியாக இந்த பிரச்சனையை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுப்போய் தீர்வு காண்பது என்ற முடிவுக்கு இருவரும் வருகின்றனர்

அவ்வாறு இருவரும் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்தவற்றைக் கூற இதைக்கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கால்வாய்க்கு அருகில் இருப்பது ஸூபைர் (ரலி) அவர்களுடைய தோட்டம் என்பதால் கால்வாயிலிருந்து தண்ணீர் திறந்து விட்டதும் முதலில் ஸூபைர்(ரலி) அவர்களுடைய தோட்டத்திற்கு தான் செல்ல வேண்டும் என்பதால் ஸூபைர்(ரலி) அவர்களுடைய தோட்டத்திற்கு தண்ணீர பாய்ச்சியப் பின்னரே அன்சாரி தோட்டத்திற்கு தண்ணீரை விட வேண்டும் என்று தீர்ப்புக் கூறினார்கள். 

இதுவே நியாயமான தீர்ப்பு ஆனால் இதைக் கேட்டதும் ஓஹோ இவர் உங்கள் மாமி மகன் என்பதால் தீர்ப்பை இவ்வாறு கூறுகிறீர்களோ ? என்று முகத்தில் அறைந்தாற்போல் பதிலளித்து விடுகிறார்.

இதைக் கேட்டதும் அமைதி தவழும் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடைய முகம் வேதனையால் இறுகத் தொடங்கி நிறம் மாறி விடுகிறது.

காரணம் அவர் அளித்த பதிலில் கடுகளவேனும் உண்மை இல்லை  அவர் கூறியதுபோல் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தங்களுடைய உறவினர்களை எதிலும் முன்னிருத்தியதே கிடையாது பின்னிருத்தியே வைத்திருந்தார்கள்.

·         அரச பதவிகளிலோ, அதிகாரம் நிறைந்த பொறுப்புகளிலோ முன்னிருத்தியது கிடையாது,
·          யாரிடமும் வாக்காலத்து வாங்கி பேசியது கிடையாது,
·         யாரிடமும் சிபாரிசுக்காக ஆளனுப்பியதும் கிடையாது.

மாறாக அனைத்திலுமே தங்கள் உறவினர்களை பின்னிருத்தியே வைத்திருந்தார்கள். இது அவருக்கும் நன்றாகத் தெரியும் !

ஆனாலும் அவர் ஸூபைர் (ரலி) அவர்களுடன் கோபத்தில் இருந்த காரணத்தாலும் தீர்ப்பு தனக்கு சாதகமாக அமையாத காரணத்தாலும் அவருக்கிருந்தக் கோபம் இன்னும் அதிகரித்து தீர்ப்பில் இருக்கும் உண்மையை உணர முடியாமல் தடுத்து விடுவதுடன் தீர்ப்பு வழங்கியவர் இறைவனின் திருத்தூதர் என்பதையும் அவர் தங்களுடைய கண்ணியத்திற்கும், மரியாதைக்கும் உரியவர் என்பதையும் தங்களின் உயிரிலும் மேலானவர் என்பதையும் சிந்திக்க விடாமல் கோபம் தடுத்து விடுதுடன். மனம் சஞ்சலப்படும் வார்த்தையையும் அவர்களின் மீது அள்ளி வீச வைத்து விடுகிறது.

ஆனாலும் அமைதியின் பொக்கிஷம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதிலேதும் அளிக்க வில்லை. கோபம் அவரை மிகைத்திருந்ததால் அவருடைய அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்கு அண்ணல் அவர்கள் பதிலளிதிருந்தால் அதற்கு அவர் திருப்பி வேறு விதமாக மறு பதிலளிக்கலாம் அது முன்னதை விட மோசமாகவும் கூட இருக்கலாம்.

ஆனாலும் அந்த தீர்ப்பு தான் சரி என்பதை அவருக்கு மீண்டும் உணர்த்தும் விதமாக இரண்டாவது முறையும் அதையே அண்ணல் அவர்கள் கூடுதல் அழுத்தத்துடன் ஸூபைர் (ரலி) அவர்களிடம் உன் மரங்கள் முழுவதிற்கும் தண்ணீரை பாய்ச்சி முடித்துவிட்டு அதன் பின்னரே அவருடைய தோட்டத்திற்கு தண்ணீரை அனுப்பு என்று கூறி விடுகிறார்கள்.

·         இவர் இப்படி சொல்லி விட்டாரே என்பதற்காக அவரை சரி கட்டுவதற்காக அண்ணல் அவர்கள் தீர்ப்பை மாற்றி அவருக்கு சாதகமாகக் கூறவில்லை.

·         இப்படி சொல்லி விட்டாரே என்பதற்காக அதிகாரத்தை பயன்படுத்தி அவருடைய தோட்டத்திற்கு செல்லும் தண்ணீரை தடுத்து நிருத்திடவும் இல்லை.

கோபத்திலும் நிதானத்துடன் செயல்பட்டு நீதி வழங்கியதில் அண்ணல் அவர்களைப் போன்று உலகில் வேறெவரையும் யாராலும் காட்டவே முடியாது இதுவரைக் காட்டியதும் இல்லை. அண்ணல் அவர்கள் மொத்த உலகுக்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்டவர்கள் என்பதால் நீதி தவற வில்லை. சகிப்புத் தன்மையும், மன்னிக்கும் மனப்பக்குவமும் கொண்ட மாநபியவர்கள் அவருடைய கடுஞ்சொல்லுக்காக அவரை குற்றம் பிடிக்காமல் பிழைபொறுத்தார்கள். 

107. (முஹம்மதே!) அகிலத்தாருக்கு 281  அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம். 187
இதே வேறு யாராவது அந்த பொறுப்பில் இருந்திருந்தால் யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்கிறாய் ? என்று எழுந்து வேட்டியை மடித்துக கட்டி இருப்பார், வெடித்திருக்கும் பிரச்சனை உடைந்திருக்கும் மண்டைகள், பிளந்திருக்கும் ஜமாத்துகள் இரு கூராக.

அண்ணல் அவர்களுக்கும் அவர் அளித்த பதிலில் கோபம் ஏற்படவே செய்தது கோபம் ஏற்பட்டதால் தான் முகத்தில் நிறம் மாறியது கோபம் ஏற்படாமல் முகம் நிறம் மாறவில்லை ஆனாலும் நிதானம் காத்தார்கள் அவருக்கு சூடாக பதிலளிக்கவும் இல்லை. அவருக்கு அநீதி இழைக்கவும் இல்லை.

அண்ணல் அவர்கள் கையாண்ட விதத்தால் அண்ணல் அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி கொண்டு கோபத்தில் இருந்த அன்சாரி தோழருக்கு அல்லாஹ்வே பதிலளித்து அவருடைய கோபத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தான்.

4:65. (முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

இதற்காகவே இறைவனிடமிருந்து இந்த திருவசனம் இறங்கும் நிலைக்கு இந்த பிரச்சனை தள்ளப்பட்டது.

உங்கள் தீர்ப்பை முழுமையாக ஏற்காதவரை அதற்கு கட்டுப்படாதவரை இறைவிசுவாசிகளாக முடியாது (முழுமையான முஸ்லீமாக முடியாது) என்ற திருவசனம் இறங்கியப் பின்னரே அவருடைய கோபம் கட்டுக்குள் வந்தது அந்தளவுக்கு இறைவிசுவாசத்தில் உலக மக்களுக்கு முன்னோடி அவர்கள் !

மேற்காணும் சம்பவத்தைக் கூறும் புகாரி கிரந்தம்
எனக்கு பத்ருப் போரில் பங்கெடுத்த அன்சாரி ஒருவருடன் (மதீனாவின்) 'ஹர்ரா' எனும் (கருங்கல் பூமியிலுள்ள) ஒரு கால்வாயின் விஷயத்தில் தகராறு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் அந்தக் கால்வாய் மூலமாகத் தான் எங்கள் தோட்டங்களுக்கு நீர்பாய்ச்சி வந்தோம். நபியவர்களிடம் வழக்கில் தீர்ப்புக் கேட்டு சென்றபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'ஸுபைரே! (முதலில்) நீங்கள் தண்¡ர் பாய்ச்சிக் கொண்டு, பிறகு உங்கள் அண்டையிலிருப்பவருக்கு அதை அனுப்பி விடுங்கள்'' என்று கூறினார்கள். இதைக் கேட்ட அந்த அன்சாரி கோபமடைந்து, 'இறைத்தூதர் அவர்களே! உங்கள் அத்தையின் மகன் என்பதாலா (இப்படித் தீர்ப்புக் கூறினீர்கள்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால் சிவந்து) நிறம் மாறியது. பிறகு வரப்புகளைச் சென்றடையும் வரை தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். இவ்வாறு ஸுபைர்(ரலி) அவர்களுக்கு, அன்னாருடைய முழு உரிமையையும் இறைத்தூதர் வழங்கினார்கள்.

''இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதற்கு முன் ஸுபைர்(ரலி) அவர்களுக்கும் அந்த அன்சாரிக்கும் தாராளமாகப் பயன் தரும் விதத்தில் ஸுபைர்(ரலி) அவர்களிடம் யோசனை தெரிவித்தார்கள். ஆனால், அந்த அன்சாரி அல்லாஹ்வின் தூதருக்குக் கோபமூட்டியபோது ஸுபைர்(ரலி) அவர்களுக்கு அவர்களின் உரிமையை தெளிவான ஆணையின் வாயிலாக முழுமையாக வழங்கிவிட்டார்கள்'' என்று அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்.

''(நபியே!) உங்களுடைய இறைவன் மீது ஆணையாக! அவர்கள் தமக்குள் ஏற்படும் சச்சரவுகளில் உங்களை நீதிபதியாக ஏற்று, நீங்கள் வழங்கும் தீர்ப்பை மனத்தில் எந்த அதிருப்தியும் கொள்ளாமல் அங்கிகரித்து, முற்றிலும் கட்டுப்பட்டு நடக்காத வரையில், அவர்கள் உண்மையான விசுவாசிகளாய் ஆக மாட்டார்கள்' என்னும் (திருக்குர்ஆன் 04:65) வசனம் இது தொடர்பாகவே இறங்கியதாக நான் நினைக்கிறேன்'' என்று ஸுபைர்(ரலி) கூறினார். புகாரி: 2708. ஸுபைர்(ரலி) அறிவித்தார்.

அல்லாஹ் நாடினால் இன்னும் தொடரும்....




وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக