திங்கள், 9 ஜூலை, 2012

.


ஏகஇறைவனின் திருப்பெயரால்....

أَن تَعْتَدُواْ وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ شَدِيدُ الْعِقَابِ {2}
...நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறரிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். 5:02



கேலி, கிண்டலால் உருவாகும் கலாட்டாக்கள்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கடந்த கட்டுரையில் சகோதரத்துவம் என்றால் அது எப்படிப்பட்டது என்பதை நடைமுறையில் செய்துகாட்டி உலகுக்கு உணர்த்தியவர்கள் அன்சாரிகள் என்பதையும் அப்படிப்பட்ட அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மத்தியில் சகோதரத்துவத்தை சீர்குலைப்பதற்காக எந்த அதிகாரத்திலும் தங்களுடைய உறவினர்களை முன்னிலைப்படுத்தாமல் மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்களுடைய மாமி மகனை இதில் புகுத்தி இருவருக்கும் மத்தியில் ஷைத்தான் கோபத்தை மூட்டி விட்டதையும் அதை அறிவின் பொக்கிஷம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நிதானமாக கையாண்டு முறியடித்த விதத்தையும் இதற்காகவே அல்லாஹ்விடமிருந்து திருவசனம் இறங்கியதையும் பார்த்தோம்.

இதேப்போன்று அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மத்தியில் இன்னுமொரு தடவை கோபத்தின் மூலமாக கலகத்தை வெடிக்கச்செய்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளிய சம்பவமும் உண்டு.

கேலி, கிண்டல்.
கோபம் பல வழிகளில் மனிதனை ஆக்ரமிக்கும் அதில் மிகவும் இலகுவான ஒரு வழி கேலி, கிண்டல், கிச்சு கிச்சு மூட்டுகின்ற வழியாகும்.

எல்லோரும் எப்பொழுதும் ஒரே மாதிரியான மூடில் இருக்க மாட்டார்கள் சில நேரத்தில் மூட்அவுட்டில் இருப்பார்கள் மூட்அவுட்டில் இருப்பவர்கள் அவ்வளவாக முகத்தில் காட்டிக்கொள்ள மாட்டார்கள் காரணம் மூட்அவுட்டுக்கான சம்பவங்களில் சிலவற்றை வெளியில் சொல்ல முடியாததாக இருக்கும் அதனால் முகத்தில் பாவனை செய்து கொண்டிருப்பார்கள் உள்ளத்தில் புழுங்கிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் இது ஷைத்தானுக்குத் தெரிவதால் இந்த நேரத்தில் கலகத்தை உண்டுப் பண்ணி விடுவதற்கு ஆர்வம் கொள்வான்.  

எப்பொழுதும் விலாப்பகுதியில் ஒரு கிள்ளு கிள்ளுபவர் அன்றும் எதார்த்தமாக கிள்ளி விடுவார் எப்பொழுதும் சிரித்துக்கொண்டு நெளிபவர் அன்று ஓங்கி ஒரு அறை விட்டு விடுவார்.
இது அவர்கள் இருவருக்கு மத்தியில் கை கலப்பில் தொடங்கி அவர்கள் இருவருடன் இது நின்று விடாமல் குடும்ப சண்டை, கோஷ்டி சண்டையாக மாறி விடுவதற்கு பெரும்பாலும் வாய்ப்பிருக்கிறது.

அதனால் இதை அனைவரும் அதிகபட்சம் தவிர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.பெரும் பாவங்களில் அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் விழவைக்க முடியாத ஷைத்தான், அவர்களுக்கு மத்தியில் சகோதரத்துவத்தை உடைக்க முடியாத ஷைத்தான் இதுபோன்ற வழிகளிலும் அவர்களைப் பிரித்து விடுவதற்கான வேலைகளை பல தடவை செய்தே வந்தான்.

அறியாமை காலத்து அறைகூவல்
ஒரு நாள் பனூமுஸ்தலக் யுத்தத்திற்கு செல்லும் வழியில் முகாமிட்டிருந்த பொழுது முஹாஜிர் ஒருவர் அன்சாரி ஒருவருடைய புட்டத்தில் விளையாட்டுக்காக தட்டி விடுகிறார் அன்சாரிக்கு சடேரென கோபம் வந்து விடுகிறது அதனால் இருவருக்கும் மத்தியில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அன்சாரிகளும், முஹாஜிர்களும் இரு அணியாக நின்று மோதும் அளவுக்கு நிலமை தீவிரமடைந்து விடுகிறது.

அன்சாரிகளே ஓடி வாருங்கள் என்று கடும் கோபத்திலிருந்த அன்சாரி குரலெழுப்ப முஹாஜிர்களே ஓடி வாருங்கள் என்று முஹாஜிர் குரலெழுப்ப கூடாரத்திற்குள் இருந்த இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு இந்த கூச்சல் காதில் விழ கூடாரத்தை விட்டு வெளியே வந்து இருவருக்கு மத்தியில் சமாதானம் செய்து நிலமையைக் கட்டுப்படுத்தினார்கள்.

இறைத் தூதர்(ஸல்) அவர்கள் மட்டும் அங்கிருந்திருக்க வில்லை என்றால் கலகம் பெரிதாக வெடித்திருக்கும் காரணம் அன்சாரிகளுடன் இஸ்லாத்தில் இணைந்து முனாஃபிக் வேடமிட்டுக் கொண்டிருந்த அப்துல்லாஹ் இப்னு உபை கூடவே இருந்து பிரச்சனையை அணைய விடாமல் ஊதிப் பற்ற வைத்துக் கொண்டிருந்தான்.  .

இறைத்தூதுர்(ஸல்) அவர்கள் சமாதானப்படுத்தி விட்டு நகர்ந்ததும் அன்சாரிகளின் வேகம் தனிவதற்குள் அவர்களிடம் சென்று மதீனாவிற்கு திரும்பியதும் இவர்களை ஒரு கைப் பார்த்து வெளியேற்றி விடுவோம் என்றுக் கூற இதைக்கேட்ட மாவீரர் உமர்(ரலி) அவர்கள் அவனுடைய தலையை வெட்டாமல் விடக்கூடாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூற அதற்கு இறைத்தூதர்(ஸல்)அவர்கள் வேண்டாம் என்று அவர்களையும் சமாதானப்படுத்தி விடுகிறார்கள்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (பனூமுஸ்தலிக்) புனிதப் போருக்குச் சென்றோம் நபியவர்களுடன் முஹாஜிர்களும் ஒருவர் இருவராகப் புறப்பட்டு நிறையப் பேராகிவிட்டனர். முஹாஜிர்களிடையே விளையாட்டுக்காட்டும் ஒருவர் இருந்தார். அவர் அன்சாரி ஒருவரின் புட்டத்தில் (விளையாட்டாக) அடித்துவிட்டார். எனவே, அந்த அன்சாரி கடும் கோபம் அடைந்தார். (தகராறு முற்றி) இருவரும் தத்தம் குலத்தாரை உதவிக்கு அழைத்தார்கள். அன்சாரி, 'அன்சாரிகளே!'' என்றழைத்தார். முஹாஜிர், 'முஹாஜிர்களே!'' என்றழைத்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் வெளியே வந்து, 'அறியாமைக் கால மக்களின் அழைப்பு இங்கே கேட்கிறதே, ஏன்?' என்று கேட்டு விட்டு, 'அவ்விருவரின் விவகாரம் என்ன?' என்று கேட்டார்கள். முஹாஜிர், அன்சாரியைப் புட்டத்தில் அடித்தது. நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இந்த அறியாமைக் கால அழைப்பை விட்டு விடுங்கள். இது அருவருப்பானது'' என்று கூறினார்கள். (நயவஞ்சகர்களின் தலைவனான) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல், 'நமக்கெதிராக (இந்த அகதிகளான முஹாஜிர்கள் தம் குலத்தாரிடம்) உதவி கேட்டு அழைத்தார்களா?' நாம் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால் வலிமையுள்ளவர்கள் நகரத்திலிருந்து இழிந்தவர்களை வெளியேற்றி விடுவார்கள்'' என்று (விஷமமாகச்) சொன்னான். உடனே உமர்(ரலி), 'இந்தத் தீயவனை நாம் கொன்று விட வேண்டாமா? இறைத்தூதர் அவர்களே!'' என்று அப்துல்லாஹ் இப்னு உபையைக் குறித்துக் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(அவனைக்) கொல்ல வேண்டாம். மக்கள், 'முஹம்மது தன் தோழர்களை கூட கொல்கிறார்'' என்று பேசுவார்கள்'' என்று பதிலளித்தார்கள். 3518. ஜாபிர்(ரலி) கூறினார்.

சிந்தியுங்கள் சகோதரர்களே

•             நடந்த சம்பவம் என்ன ?
•             இது நடந்ததற்கு மூல காரணம் என்ன ?
•             இன்றும் இது போல் நடக்கிறதா ? இல்லையா ?

ஒரே ரூமில் தங்கிப் படிப்பவர்கள், ஒரே ரூமில் தங்கி வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கு மத்தியில் இது அதிகமாக நடந்துவருகிறது, எதிரெதிர் கட்டிலில் படுத்துறங்குபவர்கள் பொழுது விடிந்ததும் ஒருவர் முகத்தில் ஒருவர் முழித்துக்கொள்ள முடியாத அளவுக்கு ஒருவருக்கொருவர் ஸலாம் கூறிக்கொள்ள முடியாத அளவுக்கு இந்த கேலி, கிண்டல், கிச்சு கிச்சு மூட்டுவதன் மூலமாக கோபத்தை ஷைத்தான் விதைத்து பிரச்சனையை உண்டுப் பண்ணி விடுகிறான்.  

கேட்டால் என் மீது என்ன தவறு இருக்கிறது எப்பொழுதும் தட்டுவது போல் சும்மா தமாஷூக்காத் தட்டினேன் எப்பொழுதும் ஜோக் அடிப்பது போல் தமாஷூக்கா ஜோக் அடித்தேன் என்றுக் கூறி தங்களுடைய செயலுக்கு ஞாயம் கற்பிக்க முயல்வர் ஆனால் எப்பொழுதும் சிரித்துக்கொண்டு நெளிந்து கொண்டு இருப்பவர் அன்று என்ன மூடில் இருந்தார் என்பது இவருக்குத் தெரியாது. அதனால் இந்தப் பரிகாச விளையாட்டை அறவேத தவிர்த்துக் கொள்ள் வேண்டும்.

இதுப் போன்று எந்த நேரமும் ஜோக் அடிப்பவரை, உடலில் சில பாகங்களில் தட்டி நெளிய விட்டு ரசிப்பவர்களை அறவே அனுமதிக்கக் கூடாது ஆரம்பத்திலேயே தடுத்து விடவேண்டும்.

இல்லை என்றால் எல்லா நேரமும் அவருடைய இந்த விளையாட்டுக்கு நெளிந்து வளைந்து ஆடிவிட்டு ஒரு நாள் சீறிப் பாய்ந்தால் பதிலுக்கு அவரும் பாய்வார் கிண்டல் கலாட்டாவில் முடிந்து விடும்.

பெண்கள் மத்தியிலும் இந்த கேலி, கிண்டல், நையாண்டி செய்வது ஜோக் அடிப்பது, கிச்சு கிச்சு மூட்டுவது அதிகமாக இருந்து வருகிறது. 

இஸ்லாம் நடைமுறைக்கு ஏற்ற மார்க்கம் என்பதற்கு இதெல்லாம் சிறந்த அளவுகோலாகும் இஸ்லாமிய மார்க்கத்தை இறைவன் உலகுக்கு ஒருப் புத்தகமாக வாணிலிருந்து இறக்கி வைக்காமல் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடைய வாழ்விலும்  அவர்கள் வாழும் காலம்வரை அவர்களுடன் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்த மக்களுடைய வாழ்விலும் நடந்தப் பல சம்பவங்களில் இன்னது ஏற்புடையது, இன்னது ஏற்புடையதல்ல என்று அவ்வப்பொழுது இறைச் செய்தியை அறிவித்து இறக்கிய திருக்குர்ஆனை மார்க்கமாக இறைவன் மனித குலம் அனைத்திற்கும் வழங்கினான்.

அதனால் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடைய வாழ்க்கையிலும், அவர்கள் வாழும் காலம்வரை அவர்களுடன் வாழ்ந்த மக்களுடைய வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் நமக்குப் படிப்பினை தருவதாக அமைந்திருக்கிறது.

மேற்காணும் சம்பவத்தை மக்கள் படித்திருந்தால் இதுபோன்ற கோபத்தை மூட்டக் கூடிய ஷைத்தான் எளிதாக நுழையக்கூடிய கேலி, கிண்டல், கிச்சு கிச்சு மூட்டுகின்ற  விளையாட்டுகளை தவிர்த்துக்கொள்வார்கள்.

தேவையற்ற விளையாட்டுக்களை தவிர்த்துக்கொண்டு அவசியமான விஷயங்களில் ஒருவர் மற்றவருக்கு உதவினால் உறுதுணையாக இருந்தால் வாழ்வில் இன்றி அமையாத கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறிச் செல்பவர்களாக ஆவதுடன் அறிஞர்களாகவும், மேதைகளாகவும் மாறுவதற்கும் சகோதரத்துவம் உடையாமல் மறுமையில் வெற்றியாளர்களாக ஆவதற்கும் பயனளிக்கும்.  

...நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறரிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். 5:02

அன்று பக்குவப்பட்ட மக்களையே கோபம் (ஷைத்தான்) விட்டு வைக்க வில்லை என்றால் இன்று பக்குவப்படாத நம்மை கோபம் (ஷைத்தான்) விட்டு விடுவானா ? என்பதை கருத்தில் கொள்வதற்காகவே மேற்காணும் சில சம்பவங்களுடன் எழுதப்படுகிறது.

அன்று பக்குவப்பட்ட அந்த மக்களிடம் ஷைத்தான் கோபத்தை மூட்டியதன் மூலம் தோல்வியையேத் தழுவினான் ஆனால் இன்று பக்குவப்படாத நம்மிடம் கோபத்தை மூட்டுவதன் மூலம் ஷைத்தான் வெற்றியை அடைந்து வருகிறான் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.

கலீஃபாவின் கொலைக்குக் காரணமான கோபம்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுடன் வாழ்ந்த மக்களிடம் கோபத்தின் மூலம் ஷைத்தான் எதையும் சாதிக்க முடியவில்லை இறைவனுடைய வேதம் வந்து கொண்டிருந்தக் காரணத்தால் இறைவன் தூதுச்செய்தி மூலம் ஷைத்தானின் பல முயற்சிகளை  முறியடித்தான், அறிவின் பொக்கிஷமாகிய அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இயல்பிலேயே சாந்த குணமுடையவர்கள் என்பதால் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போது நிதானப்போக்கை கையாண்டு ஷைத்தானின் பல முயற்சிகளை முறியடித்து வந்தார்கள்.

அவர்களின் மறைவிற்குப்பிறகு சமுதாயம் இருக் கூறாக பிளவுபடுவதற்கு ஒரு சாராருடைய உச்சந்தலையின் முடியை பிடித்துக்கொண்டு ஷைத்தான் உலுக்கியக் காரணத்தால் கோபத்தின் உச்சிக்கு சென்றவர்கள் சமுதாயத்தை சாய்த்துப்போட்ட வரலாற்றைப் படித்திருக்கிறோம். 

உஸ்மான்(ரலி) அவர்களின் ஆட்சியை அகற்றிவிட்டு வேறொரு ஆட்சி அமைப்பதற்காக உஸ்மான்(ரலி) அவர்கள் மீது பல குற்றச்சாட்டுகளுடன் எகிப்திலிருந்து மதீனாவை நோக்கி புறப்பட்டு வந்த புரட்சியாளர்களிடம் சமாதானம் செய்து வைக்க அலி(ரலி) அவர்களை ஆட்சித் தலைவராகிய உஸ்மான் (ரலி) அவர்கள் நியமித்தார்கள்.

அலி(ரலி) அவர்கள் புரட்சியாளர்களை சந்தித்து அவர்கள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு தெளிவான விளக்கமளிக்கப்பட்டப்பின் அதன் மூலம் திருப்தி அடைந்தவர்கள் திரும்பி சென்று கொண்டிருக்கையில் அவர்களைத் தாண்டிக் கடந்து சென்ற சந்தேகத்திற்கிடமான நபரை வழிமறித்து சோதித்தபொழுது அவருடைய கையில் கிடைத்த கடிதத்தில் புரட்சியாளர்கள் அனைவரும் எகிப்தை அடைந்ததும் கொன்று விட வேண்டும் இப்படிக்கு ஜனாதிபதி உஸ்மான் பின் அஃபான் என்று எழுதி உஸ்மான்(ரலி) அவர்களின் கையெழுத்துக்கான முத்திரையும் இருந்ததைப் படித்ததும் கோபம் அவர்களுடைய உச்சந்தலையில் ஏறி உட்கார்ந்து விட்டது.

·         திரும்பியது படை மதீனாவை நோக்கி
·         ஈவிறக்கமின்றி கொலை செய்யப்பட்டார்கள் உஸ்மான்(ரலி) அவர்கள்,
·         அலி (ரலி) அவர்கள் ஜனாதிபதி ஆனார்கள்
·         உஸ்மான் (ரலி) அவர்களின் கொலைக்கு அலி (ரலி) அவர்களிடம் ஞாயம் கேட்டு உருவாணது அணி
·         பிளவுபட்டது சமுதாயம்.

இதற்கெல்லாம் காரணம் கோபம் தான் நம்மை கொலை செய்ய உத்தரவிட்டவரை நாம் கொலை செய்து விட வேண்டும் என்ற முடிவை கோபம் மேற்கொள்ள வைத்தது.

கோபத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நிதானமாக சிந்தித்திருந்தால் நிச்சயமாக இப்படிப்பட்ட ஒருக் கடிதத்தை அவர்கள் எழுதியே இருக்க மாட்டார்கள் என்ற நல்லெண்ணம் மேலோங்கி இருக்கும்.

உஸ்மான்(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களால் சொர்க்கத்திற்கு முன்னறிவிப்பு செய்யப்பட்ட பத்து பேரில் ஒருவர் இவர் இப்படி அன்டர்கிரவுன்டு வேலை செய்வாரா ? என்றெல்லாம் அவர்களின் உச்சி முடியைப் பிடித்து உலுக்கிய கோபம் சிந்திக்க விடவில்லை.

இறுதியில் அந்தக் கடிதத்தை உஸ்மான்(ரலி) அவர்கள் எழுதவே இல்லை மாறாக அவர்களிடம் பணியாளராக இருந்த மர்வான் பின் ஹக்கம் என்பவர் தங்களுடைய கோத்திரத்தார்கள் அரசப் பதவியை விட்டு விலகி விடக் கூடாது என்பதற்காக எழுதப்பட்டது.

இதன் முழு சரித்திரத்தையும் கீழ்காணும் லிங்கை சொடுக்கி தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் சரித்திரம் இது.

கோபம் இருந்தால் தான் வீரத்திற்கு அழகு என்பது போல் இன்று மாற்றப்பட்டு விட்டதால் கோபம் வரவில்லை என்றாலும் முகத்தை டென்ஷனாக வைத்துக்கோண்டு ஷைத்தானை கூவி அழைத்து அருகில் வைத்துக்கொள்ளும் நிலையை இன்றுப் பலரிடம் பார்த்து வருகிறோம்.

கோபம் ஷைத்தானின் மூலமாகத் தான் மனிதனுக்குள் நுழைகிறான் என்பதை அல்லாஹ் நாடினால் இன்னும் எழுதுவோம்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக